×

பிரிட்டன் இளவரசர் மீதான பாலியல் வழக்கு ; புகார் கூறிய பெண்ணுடன் நீதிமன்றத்திற்கு வெளியே சமரசம் ஏற்பட்டதால் வழக்கு வாபஸ்!!

லண்டன் : தன் மீது பாலியல் புகார் கூறிய பெண்ணுக்கு பிரிட்டன் இளவரசர் ஆண்ட்ரூ இழப்பீடு வழங்க முன்வந்துள்ளதை அடுத்து அவர் மீதான பாலியல் வழக்கு திரும்பப் பெறபட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத் – பிலிப் தம்பதியினரின் இளைய மகன் இளவரசர் ஆண்ட்ரூ கடந்த 2001ம் ஆண்டு வர்ஜீனிய ஜியூப்ரே என்ற 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. உரிய ஆதாரங்களுடன் பாதிக்கப்பட்ட பெண் நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பாலியல் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்த 61 வயதான ஆண்ட்ரூ, தன் மீதான புகாரை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் முறையிட்டு இருந்தார். ஆனால் அவர் பாலியல் வழக்கு விசாரணையை சந்தித்தே ஆக வேண்டும் என்று கடந்த மாதம் நியூயார்க் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. ராணி எலிசபெத் அரியணை ஏறியதன் 70வது ஆண்டை அரசு குடும்பத்தினர் கொண்டாடி வரும் நிலையில், இளவரசர் ஆண்ட்ரூ மீதான பாலியல் வழக்கால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.  இதையடுத்து இவ்வழக்கை சுமூகமாக தீர்க்க இளவரசர் ஆண்ட்ரூவுக்கு ராணி எலிசபெத் அழுத்தம் கொடுத்ததாக தெரிகிறது. இந்த நிலையில், வழக்கை முடிவுக்கு கொண்டு வர பாலியல் புகார் கூறிய வர்ஜீனிய ஜியூப்ரேயுடன் இளவரசர் ஆண்ட்ரூ நீதிமன்றத்திற்கு வெளியே சமரசம் செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜியூப்ரே நடத்தி வரும் தொண்டு நிறுவனத்திற்கு ஆண்ட்ரூ இந்திய மதிப்பில் சுமார் 120 கோடி ரூபாய் நன்கொடை அளிக்க முன் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத் தொடர்ந்து சட்ட நடைமுறைகளை பின்பற்றி 30 நாட்களுக்குள் வழக்கை திரும்ப பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜியூப்ரேவின் வழக்கறிஞர்கள் தாக்கல் செய்த நீதிமன்ற ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.    …

The post பிரிட்டன் இளவரசர் மீதான பாலியல் வழக்கு ; புகார் கூறிய பெண்ணுடன் நீதிமன்றத்திற்கு வெளியே சமரசம் ஏற்பட்டதால் வழக்கு வாபஸ்!! appeared first on Dinakaran.

Tags : London ,Britain ,Prince ,Andrew ,Dinakaran ,
× RELATED உலகம் முழுவதும் வானில் வர்ணஜாலம்;...